டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவது விவசாயிகள் இல்லை; இடைத்தரகர்கள் அர்ஜூன் சம்பத் கருத்து

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவது விவசாயிகள் இல்லை; இடைத்தரகர்கள் அர்ஜூன் சம்பத் கருத்து

Published on

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவது விவசாயிகள் இல்லை; இடைத்தரகர்கள் என்று, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

குடியரசு தினத்தையொட்டி, இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் நேற்று தேசியக்கொடி ஏற்றினார். அங்கிருந்து, புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து ரயில் நிலையம் எதிரே உள்ள குமரன் சிலை வரை வாகனப் பேரணி நடத்தினர்.

குமரன் சிலைக்கு மாலை அணிவித்து, செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறும்போது, "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்த சட்டங்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை உறுதி செய்கின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்ய உரிமை கிடைக்கிறது. இடைத்தரகர்கள் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

இந்த சட்டங்கள் விவசாயிகளின் வளர்ச்சி பாதைக்கானவை. வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இடைத்தரகர்களை தூண்டிவிட்டுள்ளனர். டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோர் விவசாயிகள் இல்லை. அதில், இடைத்தரகர்களே ஈடுபட்டுள்ளனர். எந்த காரணத்துக்காகவும் மத்திய அரசு வேளாண் சட்ட விவகாரத்தில் பின்வாங்கக்கூடாது. சமீபத்தில் தமிழக மீனவர்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in