

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 11-வது தேசிய வாக்காளர் தினம், நாடு முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2021 திருத்தப் பணியின்போது பதிவு செய்த 10 இளம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் வண்ண அடையாள அட்டையையும், 15 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஜாக்கெட் மற்றும் ஜூட் பைகளும் வழங்கப்பட்டன. மேலும், 100 சதவீத வாக்குப்பதிவு அடைவதற்கான விழிப்புணர்வு எனும் தலைப்பின் கீழ், மருத்துவத் துறை, மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு ஏற்கெனவே நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் முதல் இடம் பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சுருக்கமுறை திருத்தப் பணியின்போது சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள e-EPIC CARD-ஐ இளம் வாக்காளர்கள் அவர்களது அலைபேசி மூலமாக பதிவிறக்கம் செய்யப்படுவதை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், கோட்டாட்சியர் எம்.ஜெகநாதன், வழங்கல் அலுவலர் கணேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.