மசினகுடியில் அனுமதியற்ற விடுதிகளுக்கு விரைவில் ‘சீல்’ நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

மசினகுடியில் அனுமதியற்ற விடுதிகளுக்கு விரைவில் ‘சீல்’    நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

மசினகுடியில் அனுமதியற்ற விடுதிகள் குறித்து கணக்கெடுத்த பின்னர் ‘சீல்’ வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் தங்கும் விடுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானையின் மீது தீவைத்த சம்பவம் தொடர்பாக விடுதியின் உரிமையாளர் ரேமண்ட் டீன் மற்றும் ஊழியர் பிரசாத் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்தனர்.குண்டர் சட்டத்தில் இவர்களை கைது செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மசினகுடி பகுதியில் அனுமதியற்ற தங்கும்விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, ‘சீல்’ வைக்கநடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது ‘‘மசினகுடியில் யானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவரை வனத் துறையினர் தேடி வருகின்றனர். வனத் துறையினர் பரிந்துரை கிடைத்ததும், மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுவார்கள்.

மசினகுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி குடியிருப்புகளை, தங்கும் விடுதியாக மாற்றியது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அவற்றின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும். உரிய விளக்கம் இல்லாத விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in