

பூதலூர் பகுதியில் அடுத்தடுத்து பல சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டதைத் தொடர்ந்து, அப் பகுதியை முழுமையாக அகழாய்வு செய்வதற்கான முகாந்திரம் உள்ளதா என்பது தொடர்பான அறிக்கையை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் தயார் செய்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார கிராமங்களில், சரஸ்வதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரான மணி.மாறன் உள்ளிட்ட சில வரலாற்று ஆய்வாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி உள்ளனர். அப்போது, கன்னிமார் தோப்பு பகுதியில் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பட்டறை கிணறுகள், சப்தமாதர் புடைப்பு சிற்பங்கள், மண்ணில் புதைந்த நிலையிலான விஷ்ணு சிற்பம், அடஞ்சூர் கிராமத்தில் உள்ள அனந்தீசுவரர் கோயிலின் திருச்சுற்று வெளிப் பிரகாரத்தில் பூமியில் பாதியளவு புதைந்த நிலையில் ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பம், நந்தவனப்பட்டி கிராமத்தில் சோழர் கால துவாரபாலகர் சிற்பம் மற்றும் லிங்கத் திருமேனி என அடுத்தடுத்து பல சிற்பங்கள் கண்டெடுக் கப்பட்டன.
இதையடுத்து, அப்பகுதியில் முழுமையான அகழாய்வு செய்வ தற்கான முகாந்திரம் இருக்கிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லியல் துறைக்கு, தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், பல்கலைக்கழக தொல்லியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்களும், மாணவர்களும் பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஆய்வு செய்வதற்கான பணிகளை நேற்று தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து மணி.மாறன் கூறியதாவது: கல்லணை தொடங்கி பூதலூர் வரையிலான காவிரி, வெண்ணாறு பகுதிகளில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை யான பல வரலாற்று, பாரம்பரி யம் மிக்க கோயில்களும், சிறப்புமிக்க கிராமங்களும் இருந்துள் ளன. இதற்கு சான்றாக, ஆய்வுகளின்போது பல்வேறு சிற்பங்கள், மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட நகர அமைப்புகள் வெளிவந்துள்ளன. இன்னும் அப்பகுதிகளை முழுமை யாக அகழாய்வு செய்தால், பல வரலாற்று சிறப்புமிக்க பொக்கி ஷங்களை கண்டறிய முடியும் என்றார்.