தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட ஒப்பந்ததாரர் மீது வழக்கு

தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட ஒப்பந்ததாரர் மீது வழக்கு
Updated on
1 min read

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டிட கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி இறந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர், மேற்பார்வையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விருதுநகரில் அரசு மருத்துவ கல்லூரிக்கான 5 மாடிக் கட்டிடப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஐந்தாவது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடந்தது.

அப்போது தடுப்புச் சுவர் அருகே நின்று கான்கிரீட் கலவையை எடுத்த போது அங்கிருந்து தவறி கீழே விழுந்த கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த முருகன் (45) படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரர் ராஜசேகரன், மேற் பார்வையாளர் பாண்டியராஜன் ஆகியோர் மீது சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் கேட்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விருதுநகரைச் சேர்ந்த தமிழ்நாடு ராஜகம்பள நாயக்கர் முன்னேற்றக் கழகத் தலைவர் ரவிக்குமார், துலுக்கப்பட்டியைச் சேர்ந்த தமிழ்நாடு ராஜகம்பள காப்புப் பேரவைத் தலைவர் ஆறுமுகசாமி மற்றும் ஆண், பெண் உட்பட 50 பேர் மீதும் சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in