Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

குழந்தைகள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருத்து

சிறு வயதில் இருந்தே குழந்தை களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக் கத்தை ஏற்படுத்த பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் தெரிவித்தார்.

கலை இலக்கிய ஆர்வலர் சங்கம், பாரதி புத்தகாலயம் மற்றும் அருணா ஸ்டோர் இணைந்து நடத்தும் 4-வது ராமநாதபுரம் புத்தகத் திருவிழா ஜன.22 முதல் பிப்.4 வரை செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது. காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். இங்கு 9 அரங்குகளில் 50 பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஓவியக் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. மேலும் குறைந்த கட்டணத்தில் சிறுதானிய உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

புத்தகத் திருவிழாவை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தொடங்கி வைத்தார். கலை இலக்கிய ஆர்வலர் சங்கத் தலைவர் மருத்துவர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். வர்த்தகர் சங்கத் தலைவர் பா.ஜெகதீசன், செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளித் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை இலக்கிய ஆர்வலர் சங்கச் செயலாளர் மருத்துவர் வான்தமிழ் இளம்பரிதி வரவேற்றார். காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் முதல் விற்பனையைத் தொடங்கி வைக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்திய மூர்த்தி பெற்றுக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் கோ.முத்துச்சாமி, நகராட்சி ஆணையர் என்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புத்தக அரங்குகளை பார்வையிட்ட எஸ்.பி. இ. கார்த்திக் கூறுகையில், சமூக வலைதளங்கள் வரவுக்குப் பிறகு புத்தகம் படிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். மாதம் ஒரு புத்தகமாவது படிக்கும் வகையில் குழந்தைகளை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x