

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் உள்ள தமிழ் பெயரில் எழுத்துப் பிழைகளை நீக்கக்கோரிய மாணவிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த 18 மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் மாணவிகளின் தமிழ் பெயர்கள் எழுத்துப் பிழையுடன் அச்சடித்துக் கொடுக்கப்பட்டன. எழுத்துப் பிழைகளைச் சரி செய்துகொடுக்குமாறு பள்ளி சார்பில் விருதுநகரில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கல்லூரிகளில் சேர்ந்த மாணவிகளிடம் எழுத்துப் பிழையுடன் கூடிய சான்றிதழை ஏற்க முடியாது என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
அதோடு, பிழைகளைச் சரி செய்து சான்றிதழ் பெற்றுவரக் கோரி அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளது.
இதனால் கடந்த 6 மாதங்களாகச் சான்றிதழில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிசெய்ய முடியாமல் மாணவிகள், அவர்களது பெற்றோர் தவிக்கின்றனர்.
விருதுநகரில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் மாணவிகள் நேற்று மீண்டும் குவிந்தனர். தங்களுக்கு உடனடியாக புதிய சான்றிதழ் வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட மாணவிகளும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர்.