

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஜன.30-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் அதன் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வெ.ஜீவக்குமார், என்.வி.கண்ணன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் தெரிவித்தது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் லட்சக்கணக் கான ஏக்கரில் பயிர்கள் பாதிக் கப்பட்டுள்ளன. இதனால், விவசா யிகள் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடாதது கண்டனத்துக்குரியது.
விவசாயிகள் நிகழாண்டு கூட்டுறவு மற்றும் தேசிய வங்கி களில் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளனர். ஆனால், தொடர் மழையால் பயிர்கள் பாதிக் கப்பட்டுள்ளதால், மகசூல் கிடைக்காத நிலை உள்ளது. விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதால், பயிர்க் கடன், நகைக்கடன் உள்ளிட்ட விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். நெற்பயிர் உள்ளிட்ட சேதமடைந்த அனைத்து பயிர்களுக்கும் எந்த நிபந்தனையும் இன்றி இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மழையின் காரணமாக சுவர் இடிந்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை அரசு வழங்க வேண்டும்.
மேலும், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜன.30-ம் தேதி ஒன்றியத் தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு 3 வேளாண்மை சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லியில் ஜன.26-ம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது. அதேபோல, தமிழகத்திலும் மாவட்டத் தலைநகரங்களில் டிராக்டர் பேரணி நடத்தப்பட உள்ளது. இதற்கு காவல் துறை அனுமதிக்க வேண்டும் என்றார்.