Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

முதல்வரின் வருகையை முன்னிட்டு செங்கை, காஞ்சியில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

முதல்வர் பழனிசாமியின் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல்பட்டு

செங்கை, காஞ்சி மாவட்டங்களில், முதல்வர் பழனிசாமி நாளை மற்றும் நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக நாளை, பெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட ராமானுஜர் கோயிலில் காலை 9 மணிக்கு சுவாமி தரிசனம் செய்த பின்னர், பெரும்புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் முதல்வருக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. காஞ்சியில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். மதியம் நெசவாளர், சிறு வணிகர்களுடன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு நடத்தும் முதல்வர், மாலை 4 மணியளவில்உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் விவசாயத் தொழிலாளர்களை சந்திக்கிறார்.

இதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் செங்கை பேருந்துடிப்போ முதல் காவல் நிலையம்வரை சாலை மார்க்கமாக பிரச்சாரம் மேற்கொண்டு, பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இரவு 7 மணிக்கு சிங்கப்பெருமாள் கோவிலில் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் சந்திக்கிறார். இரவு 8 மணிக்கு சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் காஞ்சி, செங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

21-ம் தேதி காலை 9 மணியளவில் திருப்போரூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பின்னர் புதுப்பட்டினம் குப்பம் மீனவர்களை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே கரும்பு, பருத்தி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை சந்திக்கிறார்.

பின்னர் 4 மணியளவில் தாம்பரத்தில் சாலை மார்க்கமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு, தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு பல்லாவரத்தில் மகளிர்குழு உறுப்பினர்களை சந்திக்கிறார்.

இந்நிலையில், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், அவர் செல்லும் வழித்தடங்களை நேற்று வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் வருகை தரும்போது, தேவையான போலீஸ் பாதுகாப்பு மற்றும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x