

தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 174-வது ஆராதனை விழா பிப்.1, 2-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் 5 நாட்கள் நடைபெறும். இதில், பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான சங்கீத வித்வான்களும், இசைக் கலைஞர்களும் பங்கேற் பது வழக்கம்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நிகழாண்டு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 174-வது ஆராதனை விழா பிப்.1, 2 என 2 நாட்கள் மட்டும் நடைபெற உள்ளது. விழாவுக்கு தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார்.
விழாவையொட்டி, திருவை யாறில் நேற்று காலை பந்தல் கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக, தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
இதில், சபை அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார், எஸ்.பாலசுப்பிர மணியன், எஸ்.கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், பொருளாளர் கணேஷ், உதவி செயலாளர் டி.ஆர்.கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிப்.1-ம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் ஆராதனை விழா தொடங்குகிறது. 5.30 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகளும், அதைத் தொடர்ந்து இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன.
பிப்.2-ம் தேதி காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை உஞ்சவிருத்தி பஜனை நிகழ்ச்சியும், 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
பின்னர், காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் இசைத்து, இசைக்கலைஞர்கள் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்த உள்ளனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிகழாண்டு பஞ்ச ரத்ன கீர்த்தனை களை இசைக்க 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது.
பின்னர், காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இரவு 7.30 மணிக்கு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலமும், அதைத் தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவமும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை தியாகபிரம்ம மகோத்சவ சபையினர் செய்து வருகின்றனர்.