

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவோணம், ஒரத்தநாடு பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெல், நிலக்கடலை, உளுந்து பயிர்களை மாவட்ட கண்காணிப்பாளர் என்.சுப்பையன், ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் ஒன்றியம் குருங்குளம், திருவோணம் ஒன்றியம் காவாலிபட்டி, அக்கரைவட்டம், சில்லத்தூர், கிருஷ்ணாபுரம், ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர் ஆகிய பகுதிகளில் 1,36,850 ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
தற்போது பருவம் தவறி பெய்த கனமழையால், சாகுபடி செய்யப்பட்டுள்ள அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
மேலும் நடப்பு மாதத்தில் விதைக்கப்பட்ட 2,385 ஏக்கர் பரப்பிலான நிலக்கடலை, உளுந்து, எள் ஆகிய பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ன.
இதையடுத்து பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கணக்கெடுக்கும் பணிகளை விரைந்து முடிக்க வருவாய்த் துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம், இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் மற்றும் வேளாண் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.