நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பனிமூட்டம் நிலவுவதால் வாகனஓட்டிகள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பனிமூட்டம் நிலவுவதால் வாகனஓட்டிகள் அவதி
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கடும் குளிர் நிலவுகிறது.

உதகை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கடும் குளிருடன் சாரல் மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. பகலிலேயே சாலைகளில் பனி மூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கினர். சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி படகு இல்லத்தில் மிதிபடகு சவாரி தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது, துடுப்புப் படகும், இயந்திரப் படகும் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தொடர் விடுமுறை என்பதால், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. உதகை, குன்னூர், மசினகுடி ஆகிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக உலிக்கலில் 20 மி.மீ., மழை பதிவானது.

உதகையில் 6.2, கேத்தியில் 6, குன்னூர், கோத்தகிரியில் 3, கோடநாடு, எடப்பள்ளி, நடுவட்டம், அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் தலா 2 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 1.84 மி.மீ., மழை பதிவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in