

தாமிரபரணி ஆற்றில் கடும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கரையோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மருதூர் தடுப்பணையை தாண்டி நேற்று பிற்பகல் நிலவரப்படி 65 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து கரையோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
வைகுண்டம் வட்டம் கொங்கராயக்குறிச்சியில் தாமிரபரணி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 10 குடும்பங்களை சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து வைகுண்டம் அணைக்கட்டை தாண்டி வெள்ளம்கரைபுரண்டு ஓடுவதை பார்வையிட்ட ஆட்சியர், கரையோர பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆழ்வார்திருநகரியில் தாமிரபரணி கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசித்த 35 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
தொடர்ந்து ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வெள்ளநீர் செல்வதை தடுக்கும் வகையில்ஆக்கிரமித்திருந்த அமலைச்செடிகளை ஆத்தூர் பேரூராட்சி மூலம் அகற்றும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.