திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் அடிப்படை வசதிகளுக்கு அவதிப்படும் பொதுமக்கள் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் முற்றுகை

திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளால்  அடிப்படை வசதிகளுக்கு அவதிப்படும் பொதுமக்கள்  மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் முற்றுகை
Updated on
1 min read

மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் திருப்பூர் மாநகரில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால், எம்.எஸ்.நகர் பகுதி மக்கள்அடிப்படை வசதிக்கு சிரமப்படுவதாகக் கூறி, மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட எம்.எஸ்.நகர், திருநீலகண்டபுரம், ஏகேஜிநகர், டிஎம்எஸ் நகர் ஆகிய பகுதிகளில் 10 நாட்கள் அல்லது அதற்கும் கூடுதல் நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் மேற்கொள்வதால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட குழிகள் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், வாகனங்களில் பயணிக்க முடியாத நிலையிலும் உள்ளன.

எஸ்.எஸ்.நகர் விரிவு, ஜெ.பி.நகர் மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்கப்படவில்லை. 4-வது குடிநீர் திட்ட பிரதான குழாய்களையும் சில குடியிருப்புகளில் பதிக்கவில்லை. இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

குடிநீர் கசிவை சரி செய்வது, குப்பையை உடனடியாக அகற்றுவது, கழிவுநீரை வடிகால் மூலமாகவெளியேற்றுவது, எரியாத தெரு விளக்குகளை சரி செய்வது, 60 அடி சாலை, எம்.எஸ்.நகர், கொங்கு பிரதான சாலை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்றனர்.

நஞ்சப்பா நகரில் உள்ள மாநகராட்சியின் 2-வது மண்டல அலுவலகம் முன்பாக நடந்த போராட்டத்தில், கட்சியின் வடக்குமாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் பா.சவுந்தரராஜன், எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கைகளை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in