

அனுமன் ஜெயந்தி விழாவினை யொட்டி நேற்று ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலில், நேற்று காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சுதர்சன ஹோமம் ஆகியவை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில், உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம, வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமிகள் கோயிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நிர்மால்யம், சிறப்பு அபிஷேகம், வேத பாராயணம், 6 மணிக்கு சுதர்சன ஹோமம் நடந்தது. ஆஞ்சநேயர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
சேலத்தில் சிறப்பு பூஜை
சேலம் பட்டைக்கோயில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஈரோட்டில் கோலாகலம்
ஈரோடு மாநகர் பகுதியில் கோட்டை பெருமாள் கோயில், கள்ளுகடைமேடு ராமபக்த ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே காலனி சித்தி விநாயகர் கோயில், காரைவாய்க்கால் ராத்திரி சத்திரம் ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சுவாமி விசேஷ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.