

மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தில் இஸ்லாமி யர்களுக்கான இடுகாடு, பள்ளி வாசல் வளாகம் உள்ளது. கடற்கரைக்கு செல்லும் வழி என்பதால் சிலர் இங்கு மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த இடத்தை சுற்றி மதில் சுவர் அமைத்து இரும்பு கதவு அமைத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஆட்சியரிடம், இப்பகுதியில்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இரும்பு கதவு அமைக்கப்பட்டுள்ளதாக மனு அளித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி மரக்காணம் வட்டாட்சியர் மற்றும் மரக்காணம் காவல் துறையினர் இரவு நேரத்தில் , இரும்பு கதவை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதையறிந்த இப்பகுதி இஸ்லாமியர்கள் நேற்று காலை வருவாய்துறையினரை கண்டித்து கூனிமேடு பள்ளிவாசல் எதிரில் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். "இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. எங்களிடம் விசாரணை மேற் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்தது தவறு" என்று மறியலில் ஈடுபட்டோர் கூறினர்.