Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக சட்டப்பேரவை வராண்டாவில் உறங்கி இரண்டாம் நாளாக அமைச்சர் தர்ணா

முக்கிய கோப்புகளுக்கு அனுமதி தராத துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவை வளா கத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி 2-வது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார். நேற்று முன்தினம் இரவு பேரவை வளாகத்திலேயே படுத்து உறங்கினார்.

புதுவையில் சமூகநலத் துறையில் நிலுவையில் உள்ள 15 கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்தரவில்லை என்று அத்துறையின் அமைச்சர் கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோப்புகளுக்கு ஒப்புதல் தரக்கோரி சட்டப்பேரவை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

சட்டப்பேரவை வராண்டாவில் தரையில் படுக்கை விரித்து உறங்கினார். 2-வது நாளான நேற்று காலை எழுந்து சட்டப்பேரவை வளாகத்திலேயே நடைப்பயிற்சி சென்ற அவர், அங்குள்ள தனது அறையில் குளித்து, மீண்டும் வராண்டாவில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார்.

முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் அவரை சந்தித்து பேசினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “சமூக நலத்துறையில் அனுப்பப் பட்ட 15 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி அமைச்சர் கந்தசாமி சட்டப்பேரவையில் போராட்டத்தை தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் என்ற முறையில் தலைமை செயலாளர், நிதித்துறை செயலர் ஆகியோரை அழைத்து பேச உள்ளேன்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பின்னும் திட்டங்களை ஆளுநர் தடுக்கிறார். இது கிரண்பேடியின் அராஜகம். ஆளுநர் என்ற முறையில் பட்ஜெட்டிற்கு அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது” என்றார்.

‘பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா?’ என்ற கேள்விக்கு, “இதுதொடர்பான கோப்பு நிதித்துறை செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கோப்பு தொடர்பான விவரங்கள் குறித்து அவரிடம் நேரில் கேட்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x