Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

தொடர் மழையால் பயிர்கள் அழுகி சேதம் இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் மனு

மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விளாத்திகுளம் அருகேயுள்ள ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் த.ரகுராமர் தலைமையில் விவசாயிகள், அழுகிய பயிர்களுடன் வந்து அளித்த மனு:

ஆற்றங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓ.துரைச்சாமிபுரம், சொக்கலிங்கபுரம், அ.கந்தசாமிபுரம், தொப்பம்பட்டி, கல்குமி, ஆற்றங்கரை ஆகிய ஊர்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பெய்து வரும் பெருமழையால் சுமார் 800 ஹெக்டேர் பரப்பில் உளுந்து, பாசிப்பயறு, வெள்ளைச் சோளம், மக்காச்சோளம், மிளகாய், வெங்காயம், கம்பு போன்ற பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. எனவே, இந்த கிராமங்களில் வசிக்கும் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜாய்சன் தலைமையில் மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அளித்த மனு:

2017- 2018-ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு உடனே மடிக்கணினி வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையாபுரம் வாதிரியார் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: வாதிரியார் சாதி பெயரை புதிய பெயர் மாற்றம் செய்யக் கூடாது. வாதிரியார் சாதிச் சான்றிதழை மாற்று சமுதாயத்துக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.

பாதை வசதி

கடம்பூர் அருகேயுள்ள சங்கராப்பேரி கிராமத்தினர் அளித்த மனு: எங்கள் ஊரில் இருந்து கடம்பூர் செல்லும் பாதையில் உள்ள ரயில்வே கீழ்மட்ட பாலத்தில் மழைநீர் தேங்கி, அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அருகேயுள்ள குண்டும், குழியுமான சாலையை தற்காலிகமாக பயன்படுத்தி வருகிறோம். எனவே, எங்கள் ஊரில் இருந்து கடம்பூர் செல்ல ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும்.

பயிர் காப்பீடு

கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டி அருகேயுள்ள குதிரைகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் குருமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் தனித்தனியாக ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: 2019- 2020-ம் ஆண்டில் உளுந்து, பாசிப்பயறு, மக்காசோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தோம். பக்கத்தில் உள்ள பலகிராமங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ள நிலையில் எங்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விரைவாக பயிர் காப்பீட்டு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x