

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று பகலிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் மீண்டும் தேங்கியது. ஏற்கெனவே கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டன. 150-க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த தண்ணீரை வெளியேற்றும் பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றது. தற்போது தான் மழைநீர் ஓரளவுக்கு வடிந்து இயல்பு நிலை திரும்பி வந்தது.
அதற்குள் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றும் பணியில் மீண்டும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில் பொங்கல் பொருட்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரும்பு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு, மண்பானை, பனை ஓலை போன்றவை நகரின் பல பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வியாபாரம் முடங்கியுள்ளது.
பொருட்கள் விற்பனையாகாமல் வியாபாரிகளும், பொருட்களை வாங்க முடியாமல் மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பிவிட்டதால், ஆற்றில்வரும் தண்ணீர் அப்படியே கடலுக்கு செல்கிறது. வைகுண்டம் அணையைதாண்டி நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 6,645 கனஅடி தண்ணீர் கடலுக்கு சென்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 24, காயல்பட்டினம் 31, விளாத்திகுளம் 2, காடல்குடி 4, வைப்பார் 19, சூரன்குடி 37, கோவில்பட்டி 1, ஓட்டப்பிடாரம் 24, மணியாச்சி 5, வேடநத்தம் 47, கீழஅரசடி 21, எட்டயபுரம் 1, சாத்தான்குளம் 16.6, வைகுண்டம் 29, தூத்துக்குடி 35 மிமீ மழை பெய்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மழையால் பொங்கல் பொருட்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.