Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

வேலூரில் மாயமான கூலி தொழிலாளி மயானத்தில் உயிரிழந்த நிலையில் மீட்பு

வேலூர்: வேலூர் தோட்டப்பாளையம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (50). கம்பி கட்டும் தொழிலாளி. இவர், கடந்த 4-ம் தேதி ரேஷன் கடையில் ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கி வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள மயானத்தில் உள்ள தகனமேடைக்கு அருகே பாதி உடல் மண்ணில் புதைந்த நிலையில் ஆண் உடல் ஒன்று கிடப்பதை நேற்று முன்தினம் இரவு சிலர் பார்த்தனர். இந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற வடக்கு காவல் துறையினர் விசாரணை செய்ததுடன், இரவு நேரம் என்பதால் உடலை மீட்க முடியவில்லை.

இந்நிலையில், மயானத்தில் பாதி புதைந்து அழுகிய நிலையில் இருந்த உடலை நேற்று காவல் துறையினர் மீட்டு விசாரித்தனர். அதில், இறந்து கிடந்தவர் மாயமான வேலு என்பது தெரியவந்தது. அவரது உடலின் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. எனவே, கொலையாளிகள் யார்? என்றும் கொலைக்கான காரணம் குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x