

குற்றங்கள் நடக்காமல் தடுக்க கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் உதவிகர மாக இருப்பார்கள் என கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் எஸ்பி பண்டி கங்காதர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்களில் குற்றத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, பெத்தாளப்பள்ளி ஊராட்சி பாஞ்சாலியூர் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. எஸ்பி பண்டி கங்காதர் தலைமை வகித்தார். டிஎஸ்பி சரவணன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வரவேற்றார்.
இதில் பாஞ்சாலியூர் கிராமத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள கிராம விழிப்புணர்வு காவலரை அறிமுகப்படுத்தி எஸ்பி பண்டி கங்காதர் பேசியதாவது:
கிராமங்களில், பொது மக்களுடன் நட்புறவை ஏற்படுத் தவும், குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கவும் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். கிராமங்களில் சிறு சிறு தகராறுகள் கூட பெரிய மோதலாக மாறி விடுகின்றன. இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க கிராம காவல் அலுவலர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குற்றங்கள் இல்லா கிராமங்களை உருவாக்க வேண்டும். கிராம மக்கள் தங்களது குறைகளையும், பிரச்சினைகளையும் அவர்களிடம் தெரிவிக்கலாம். எவ்வித அசம்பாவிதங்களும் நடப்பதற்கு முன்னர் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் புதிதாக சந்தேகப் படும்படியான நபர்கள் வந்தால் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு எஸ்பி தெரிவித்தார்.
முன்னதாக கிராம கண்காணிப்பு காவலர்களுக்கான கையேட்டினை எஸ்பி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர்கள் பெத்தாளப் பள்ளி அம்சவள்ளி வெங்கடேசன், வெங்கடாபுரம் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் உட்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.