

சூளகிரி அருகே ஏரி பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை யானையை வனத்துறையினர் காட்டுக்கு விரட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள செட்டிப் பள்ளி வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, 5 கிமீ தொலைவில் உள்ள அட்டக்குறுக்கி ஏரி பகுதியில் சுற்றித் திரிந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் யானையை காலை 7.30 மணியளவில், பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டினர்.
ஓசூர் சானமாவு வனப்பகுதியில் தொடர்ந்து 60 யானைகள் முகாமிட்டுள்ளன. இவை இரவு நேரங்களில் அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் புகுந்து விளைநிலங்களில் அறு வடை செய்து வைக்கப்பட்டுள்ள கேழ்வரகு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை ஜவளகிரி வனப்பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.