

தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டு மந்தை தெருவைச் சேர்ந்தவர் மலையபெருமாள்(55). அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 8 மணியளவில் சாதாரண உடையில் வந்த 3 நபர்கள், தங்களை போலீஸார் என்று கூறிக்கொண்டு, மலையபெருமாளின் வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர், மலைய பெருமாளின் வாகனம் ஒரு விபத்தை ஏற்படுத்தியதற்கான சிசிடிவி ஆதாரம் தங்களிடம் உள்ளதாகக் கூறிய அவர்கள், அந்த வழக்கை முடித்துவைக்க ரூ.1 கோடி தரவேண்டும். அதில் முன்பணமாக ரூ.50 லட்சத்தை உடனடியாக தரவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், தனது வாகனம் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை என்றுகூறி, பணம் தர மறுத்த மலையபெருமாளை, அந்த நபர்கள் தாக்கி வீட்டின் முதல்தளத்தில் கயிற்றால் கட்டிப்போட்டனர். தொடர்ந்து, மலையபெருமா ளின் மனைவி சாந்தி, மகள் நிவேதா ஆகியோரையும் கட்டிப் போட்டனர். அப்போது, வீட்டுக்கு வந்த மலையபெருமாளின் மகன் பாலாஜியையும்(25) தாக்கி, கட்டிப் போட்டனர்.
பின்னர், கைத் துப்பாக்கியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய அவர்கள், வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக, தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்துக்கு மலைய பெருமாள் தகவல் தெரிவித்தார். உடனடியாக, நகர காவல் துணை கண்காணிப்பாளர் பாரதிராஜன், ஆய்வாளர் ராமதாஸ் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.