

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 17 வீடுகளில் நகை, பொருட்கள் திருடு போயின. இதுதொடர்பாக, எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி, வல்லம் டிஎஸ்பி சீதாராமன், தஞ்சாவூர் நகர டிஎஸ்பி பாரதிராஜன் ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தஞ் சாவூரில் தங்கி திருட்டில் ஈடுபட்டு வந்த சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ்(29), அவரது கூட்டாளியான தஞ்சாவூர் கொண்டிராஜபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார்(23) ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களின் மற்றொரு கூட்டாளியான தஞ்சாவூரைச் சேர்ந்த அஜீத் என்பவரை தேடி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து, தஞ்சாவூர் பகுதிகளில் 17 வீடுகளில் கதவுகளை உடைத்து திருடிய 80 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் திருட்டுக்கு பயன் படுத்திய இருசக்கர வாகனங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இவர்கள் 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியுள்ள நிலை யில், அவற்றை எங்கு பதுக்கிவைத்துள்ளனர் என்ற விவரம், தலைமறைவாக உள்ள அஜீத் கைது செய்யப் பட்ட பின்னரே தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் மீது சென்னையிலும், ஆந்திரா மாநிலத்திலும் உள்ள காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், அவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில், தஞ் சாவூரில் மறைந்திருந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.