

வேலூர் மாநகராட்சி மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் பாமகவினர் 20 சதவீத இடஒதுக்கீடு தொடர் பான கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தமிழக அரசுப் பணிகளில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கோரிக்கை தொடர்பான மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
அதன்படி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இருந்து பாமக மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகம் நோக்கிச் சென்றனர். பின்னர், மாநகராட்சி அலுவலகம் முன்பாக இட ஒதுக்கீடு கோரி முழக்கமிட்டனர். தொடர்ந்து, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் இளவழகன், துணைத்தலைவர் என்.டி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் மாநக ராட்சி ஆணையர் சங்கரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதேபோல் குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்திலும் பாமகவினர் இட ஒதுக்கீடு கோரி மனுவை அளித்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் நகராட்சி அலுவலகங்களிலும் பாமகவினர் நேற்று இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.
திருப்பத்தூர்
அதேபோல, வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்ற போராட் டத்துக்கு மாவட்டச்செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சரவணன், கணபதி, ரத்தினம், அன்பரசு, பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆம்பூர் நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதையடுத்து, நகராட்சி பொறியாளர் திலீபனிடம் பாமகவினர் கோரிக்கை மனுவை வழங்கினர்.
திருவண்ணாமலை
ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் வேலாயுதம் தலைமை வகித்தார். 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி பேசினார். பின்னர் கோரிக்கைகளை வலியு றுத்தி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் முழக்கமிட்டனர். பின்னர், ஆரணி நகராட்சி ஆணை யாளர் ராஜ விஜய காமராஜிடம் பாமகவினர் மனு அளித்தனர்.
இதேபோல், செய்யாறு மற்றும் வந்தவாசி நகராட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.