

தஞ்சாவூர் காட்டுத்தோட் டத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், சம்பா பருவத்துக்கு ஏற்ற ஆடுதுறை 51, பின்பட்ட சம்பா, தாளடிக்கு ஏற்ற ஆடுதுறை 54 ஆகிய புதிய நெல் ரகங்கள் சோதனை முறையில் பயிரிடப்பட்டு, நல்ல முறையில் விளைச்சல் அடைந்துள்ளன. இதை விவசாயிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் காட்டுத் தோட்டத்தில் நடைபெற்ற வயல் தின நிகழ்ச்சியில் பார்வையிட்டனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் கூறியது: 132 நாட்கள் பயிரான ஆடுதுறை 54 ரகத்துக்கு தஞ்சை பொன்னி என்ற பெயரை வைக்கலாம். இந்த ரகம் வெள்ளை பொன்னி ரகத்தைப் போன்றது. ஆடுதுறை 51 ரகம் நீண்டகால பயிராகும். இவை 155 நாட்களில் விளையக்கூடியவை. 2 ரகங்களும் ஹெக்டேருக்கு 6,500 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. வரும் சம்பா பருவம் முதல் இந்த நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன என்றார்.
புதிய நெல்ரகத்தை ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அம்பேத்கர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவர் ச.பொற்பாவை, நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அ.ராமநா தன், த.சசிக்குமார், ரா.சுரேஷ், லோ.சுபா, பி.ஆனந்தி, ரா.புஷ்பா மற்றும் விவசா யிகள் கலந்துகொண்டனர்.