

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு நெஞ்சு கூட்டில் இருந்த ரத்தநாள கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இதுதொடர்பாக மருத்துவ மனை டீன் பாலாஜி நாதன் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி (32). கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு கடந்த 6 மாதமாக நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்காக அவர் சேலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பரிசோதனையில், அவரது நெஞ்சு கூட்டின் உள் பகுதியில் பெரிய கட்டி இருப்பதும், கட்டி மூச்சுக் குழாய், நுரையீரல், இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயை அழுத்திக் கொண்டு இருப்பதும் தெரிந்தது.
இதனையடுத்து, மருத்துவர் ராஜராஜன் தலைமையிலான 4 மருத்துவக் குழுவினர் கலைவாணிக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஒரு கிலோ அளவில் இருந்த கட்டியை அகற்றினர். கட்டியை திசு பரிசோதனை செய்ததில் அரிய வகை ரத்த நாள கட்டி என கண்டறியப்பட்டுள்ளது. உலகில் 500-க்கும் குறைவானவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.