பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறைகேடின்றி புயல் நிவாரணம் அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறைகேடின்றி புயல் நிவாரணம்  அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தர விமல்நாதன் தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகத்துக்கு நேற்று அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளது:

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட நிவர் புயல் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தர தமிழக அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இருந்து வந்த உச்சவரம்பு 2 ஹெக்டேர் என்பதை தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதுக்கும் உச்ச வரம்பின்றி இடுபொருள் நிவாரணம் வழங்க அரசு முன் வந்துள்ளது.

பயனாளிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த முன்வந்திருப்பதும் பாராட்டுக்குரியது.

பிரதமரின் விவசாயிகள் ஊக்கத்தொகை திட்டத்தில் தமிழகத்தில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், சில அலுவலர்கள் மீது மட்டும் பெயரளவுக்கு நடவடிக்கை என்கிற பெயரில் பணி இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள புயல் நிவாரண நிதியில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல், உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் பாதிக்கப்பட்ட உண்மையான விவசாயிகளின் முழுமையான முகவரி, பாதிக்கப்பட்ட நிலத்தின் புல எண்கள், பரப்பளவு, பயிர் விவரங்கள், வழங்கப்படும் நிவாரணத் தொகை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், வங்கி கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்ட தேதி உள்ளிட்டவற்றையும் எந்தவித ஒளிவு மறைவுமின்றி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

மேலும், இந்த விவரங்கள் அனைத்தையும் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வேளாண்மை துறை அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு பொது ஆவணமாக வைக்க வேண்டும். நிவாரணத் தொகை குறித்து தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in