

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் அமைதியான சூழல் நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் தலைமையில் நேற்று தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளது: கருப்பூர் கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
எங்கள் ஊரில் தனிநபர் ஒருவர் கட்டிய ராஜராஜேஸ்வரி கோயிலில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து வருபவர்களால் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவது தொடர்பாக ஏற்கெனவே போலீஸில் புகார் செய்துள்ளோம்.
கோயிலுக்கு குறிகேட்க வருபவர்களை போதிய பாதுகாப்பு தணிக்கை செய்த பிறகே ஊருக்குள் அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் ஊருக்கு ஒதுக்குபுறமாக குறி சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதுகுறித்து, ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து கோயிலில் வழிபாடு செய்வதற்கு மட்டும் அனுமதி அளித்து, கோயிலில் குறி சொல்வதை தடை செய்வதுடன், கருப்பூர் கிராமத்தில் அமைதியான சூழ்நிலை மீண்டும் நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.