நாமக்கல் பகுதி நூற்பாலையில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை தாக்கிய வெளி மாநிலத்தவர்களை கைது செய்ய வேண்டும் தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தல்

நாமக்கல் பகுதி நூற்பாலையில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை தாக்கிய வெளி மாநிலத்தவர்களை கைது செய்ய வேண்டும் தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

நாமக்கல் பகுதி நூற்பாலையில் தமிழக தொழிலாளர்களை தாக்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் கடந்த ஜன.1-ம் தேதி இரவு பணி நேரத்தில் ஜார்க்கண்ட் மாநில இளைஞர், தொழிற்சாலையில் பணியில் இருந்த தமிழக இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளார்.

அதைத் தட்டிக்கேட்ட தமிழக மேற்பார்வையாளர்களை வட இந்திய தொழிலாளர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கியதில் மேற்பார்வையாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நூற்பாலை நிர்வாகத்திடம் மேற்பார்வையாளர்கள் புகார் அளித்தும் நிர்வாகம் கண்டுகொள்ளாமல், வட இந்தியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, கடந்த 2-ம் தேதி தொட்டியம் பகுதி தொழிலாளர்களை அழைத்துச் செல்ல வந்த வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர். பின்னர், போலீஸார் தலையிட்டு வாகனங்களை விடுவித்துள்ளனர்.

தமிழ்ப் பெண்ணைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, தமிழக தொழிலாளர்களை தாக்கிய ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காமல், அவர்களை அவர்களது மாநிலத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதே நேரத்தில் அந்த நூற்பாலையில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in