

டெல்லியில் ‘தமிழ் அகாடமி’ உருவாக்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு தமிழியக்க நிறுவன தலைவர் கோ.விசுவநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தரும், தமிழியக்க நிறுவன தலைவருமான கோ.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘டெல்லியில் ‘தமிழ் அகாடமி’ அமைப்பை உருவாக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு முனைந்துள்ளது பாராட்டத்தக்க முயற்சியாகும். துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பொறுப்பேற்றிருக்கும் கலை, பண்பாடு மற்றும் மொழித்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாக ‘தமிழ் அகாடமி’ செயல்படுவதுடன் தமிழ் மொழி வளர்ச்சி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை வளர்த்து முன்னெடுக்கும்.
வரவேற்புக்குரியது...
தமிழை மேம்படுத்த ஒரு பண் பாட்டு பாலமாக ‘தமிழ் அகாடமி’ செயல்பட வேண்டும் என்றும் தமிழியக்கம் வேண்டுகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் ‘தமிழ் அகாடமி’ யின் துணைத் தலைவரும் டெல்லி நகரவை முன்னாள் உறுப்பினரும், தமிழியக்கத்தின் உறுப்பு அமைப்பான டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரான ராசா ஆகியோருக்கு தமிழியக்கம் நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது’’ என தெரிவித்துள்ளார்.