

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் 500 ஏக்கரில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது.
இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும், அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம் ஆகிய வட்டாரங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் சம்பா வயல்களில் மழைநீர் தேங்கியதால், நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
இந்த மழையின் காரணமாக கும்பகோணம் அருகே கீழக்கொட்டையூரில் மாணிக்கம், தங்கவேலு ஆகியோரின் குடிசை வீடுகள் இடிந்து சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நிதியுதவி வழங்கினார்.
இதற்கிடையே, சாலியமங்கலம் அருகே கீழக்களக்குடி கிராமத்தைச் சேர்ந்த அ.கலியபெருமாள்(65) என்பவர் நேற்று காலை வயலுக்குச் சென்றபோது, அங்கு மழையால் அறுந்துவிழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை கவனிக்காமல் மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.