

தஞ்சாவூரில் வன்னியர் சங்கம் சார்பில் பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா, வன்னியர் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வைத்தி, துணை பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், தொழிற்சங்க மாநிலத் தலைவர் ராம.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி பேசியதாவது:
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜன.7-ம் தேதி நகராட்சி அலுவலகங்கள் முன்பும், ஜன.21-ம் தேதி ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்தவுள்ளோம். இம்மாத இறுதிக்குள் இதற்கான ஆணையை வெளியிடாவிட்டால், தமிழகத்தில் போக்குவரத்து உட்பட அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்படும்.
எங்களின் தலைவர் ராமதாஸுக்கு ஆளுநர் பதவியோ, அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியோ கேட்கவில்லை. வரும் தேர்தலில் வன்னியர்களுக்கான உரிமைகளை வழங்கும் கட்சியுடன்தான் பாமக கூட்டணி அமைக்கும் என்றார்.