

தூத்துக்குடியில் சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்களில் முதல்நிலை பரிசோதனை பணி நேற்று தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தேர்தல்ஆணையம் ஏற்கெனவே தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில்உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அவை புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக் கப்பட்டுள்ளன.
இவற்றை பரிசோதனை செய்வதற்காக, பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர் குழுவினர் வந்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பு அறை திறக்கப்பட்டு, இயந்திரங்களை பொறியாளர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
மகாராஷ்டிராவில் இருந்துவந்துள்ள மற்றும் ஓட்டப்பிடாரம்,விளாத்திகுளம் இடைத்தேர்தலில் பயன்படுத்திய இயந்திரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும் இப்பணிகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். மேலும், வெப் கேமரா மூலம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு இங்கு நடைபெறும் பணிகள் அனைத்தும் நேரடியாக தெரிவிக்கப்படும்.
மாவட்டத்தில் 1,603 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. தற்போது, 2,795 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,368 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,036 சரிபார்ப்பு இயந்திரங்கள் உள்ளன. தேவையை விட 170 சதவீதம் கூடுதலாக இருப்பு வைத்துள்ளோம், என்றார் ஆட்சியர். கீதாஜீவன் எம்எல்ஏ மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.