

நீலகிரி மாவட்ட அனைத்து அரசியல் கட்சி படுகர் தலைவர் கூட்டமைப்பு சார்பில் படுகரின மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி உதகையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
உதகை ஏடிசி சுதந்திர திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமை வகித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் பெள்ளி, மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் சுரேஷ்பாபு, படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை வி.மோகன், அமமுக மாநில அமைப்புச் செயலாளர் தேனாடு லட்சுமணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உதகை தாலுகா செயலாளர் சங்கரலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். படுகரின மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி மாதம் உதகையில் அமைதிப் பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளதாக அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித் தனர்.