

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகே சுக்காம்பார் கொள்ளிடம் ஆற்றில் கடந்த நவ.10-ம் தேதி பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து தோகூர் போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தவர் யார், குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முரளி(36), தனது மனைவி ரம்யாவை(30) கொலை செய்து புதைத்ததாகக் கூறி, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் முன்னிலையில் நேற்று முன்தினம் மாலை சரணடைந்தார்.
பின்னர், செல்வராஜ் கொடுத்த தகவலின்புரில், முரளியை தோகூர் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் தெரியவந்தது:
சொந்தமாக கார் வாங்கி, வாட கைக்கு ஓட்டி வரும் முரளிக்கும், ரம்யாவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. ரம்யாவின் நடத்தையில் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த நவ.6-ம் தேதி அவர் சுத்தியலால்அடித்து ரம்யாவைக் கொன்றார்.
பின்னர், சடலத்தை போர்வையால் சுற்றி, காரின் பின்புறத்தில் வைத்து, சுக்காம்பார் கொள்ளிடம் ஆற்றுக்கு எடுத்துச் சென்று புதைத்துவிட்டார். இதற்கிடையே, கொலை நிகழ்ந்து 50 நாட்களான நிலையில், முரளியின் மனசாட்சி உறுத்தியதாலும், உறவினர்கள் தொடர்ந்து ரம்யா குறித்து கேட்டு வந்ததாலும், விஏஓவிடம் சரணடைந்துள்ளார் என்பது தெரியவந்தது.