

நாகர்கோவிலில் மேலதிகாரியின் பெயரை குறிப்பிட்டு புகார் கடிதம் எழுதி வைத்துவிட்டு கூட்டுறவு வங்கி ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
நாகர்கோவில் சற்குணவீதியை சேர்ந்தவர் கோபி(50). இவர், குருந்தன்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைக்கு செல்லாமல் விடுப்பில் இருந்து வந்த கோபி,கடந்த 9-ம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, வங்கி செயலாளர் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபி வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவரது மகள் கோபியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து கோட்டாறு போலீஸார் விசாரணை நடத்தினர். கோபி தற்கொலை செய்வதற்கு முன் அவரது வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில் தன்னுடையை மரணத்திற்கு தான் பணிபுரியும் கூட்டுறவு வங்கி செயலாளர் தான் காரணம். அனைவரது மத்தியிலும் வைத்து தன்னை அவர் அவமரியாதையாக திட்டியதால் மன வேதனையில் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் கூட்டுறவு வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.