

சேவூர் அருகே குப்பைக்கிடங்கில் சிறுமியை மீட்டது தொடர்பாக தாயார் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசிஅருகே சேவூர் தண்டுக்காரம்பாளையம் ஊராட்சி புளியம்பட்டி சாலையிலுள்ள குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் நேற்று முன்தினம் 5 வயது மதிக்கத்தக்க சிறுமி மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.
திருப்பூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவிஅளிக்கப்பட்டு, தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குழந்தையின் தாயார் சைலஜாகுமாரி (எ) சர்மிளாகுமாரியை (39) பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, "மருத்துவர் சர்மிளா குமாரிக்கு தர்மபிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களின் மகள் தான் 5 வயது சிறுமி கைரா. தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெங்களூரூவில் தனியாக வாழ்ந்துவந்தனர்.நேற்று முன்தினம் தாயும், மகளும் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். சிறுமிக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டதால், அதற்கான மருந்தை கொடுத்துவிட்டு சர்மிளாகுமாரி விஷம் அருந்தியுள்ளார்.
அதிக அளவில் சிறுமி மருந்து உட்கொண்டதால் உடல்நிலை மோசமடைந்து மயக்க நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து சிறுமியை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சர்மிளாகுமாரி மீது குழந்தையை அஜாக்கிரதையாக கையாண்டதாகக் கூறி, சேவூர் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இதுதொடர்பாக அவரது சகோதரர் மற்றும் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.