விஸ்வரூபம் எடுக்கும் பெரியாறு பாசன நீர் பிரச்சினை சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை ஜன.7-ல் முற்றுகை

சிவகங்கை அருகே ஷீல்டு கால்வாய் மூலம் பயன்பெறும் கள்ளராதினிப்பட்டி கண்மாயில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது.
சிவகங்கை அருகே ஷீல்டு கால்வாய் மூலம் பயன்பெறும் கள்ளராதினிப்பட்டி கண்மாயில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது.
Updated on
1 min read

பெரியாறு பாசன தண்ணீர் சிவகங்கை மாவட்டத்துக்கு முறைப் படி திறந்து விடப்படாததைக் கண்டித்து ஜன.7-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48-வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 129 கண்மாய்களுக்கு உட்பட்ட 6,038 ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் கடந்த செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்துக்குத் தண்ணீர் திறக்கவில்லை. இதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து அக்.1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும் முறையாக திறக்கவில்லை.

பெரியாறு, வைகை அணையில் தண்ணீர் இருப்பு குறைந்ததை அடுத்து கடந்த நவ.17-ம் தேதியிலிருந்து முறை பாசனம் அமல்படுத்தப்பட்டது. இதிலும் சிவகங்கை மாவட் டத்துக்கு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதனால் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இது தொடர்பாக முறையிட கடந்த வாரம் சிவகங்கை ஆட் சியரை சந்திக்க விவசாயிகள் சென்றபோது, அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஜன.7-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த பெரியாறு பாசன விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆட்சியர் விளக்கம்

டிச.26-ம் தேதி முதல் ஷீல்டு மற்றும் லெசிஸ் கால்வாய்களுக்கு தலா 40 கனஅடியும், கட்டாணிப்பட்டி 2-வது மடை கால்வாய்க்கு 5 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐந்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியது, ‘ஷீல்டு கால்வாய் மூலம் பயன்பெறும் முதல் கண்மாயான கள்ளராதினிப்பட்டி கண்மாயே வறண்டு கிடக்கிறது. இதிலிருந்து அதிகாரிகள் கூறுவது உண்மையில்லை என்பது தெரியவரும். தண்ணீர் திறந்தாலும் குறிப்பிட்ட கன அடி திறப்பதில்லை. பெயரளவுக்கு தண்ணீர் திறந்துவிட்டு உரிய கன அடி திறந்துவிட்டதாக கூறு கின்றனர். அதை சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் கண் காணிப்பதில்லை என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in