எம்ஜிஆரை குறை சொல்ல சீமானுக்கு தகுதியில்லை

எம்ஜிஆரை குறை சொல்ல சீமானுக்கு தகுதியில்லை

Published on

எம்ஜிஆரை குறை சொல்வதற்கு சீமானுக்கு எந்தத் தகுதியும் இல்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சிவசப்பட்டு சத்தமாக பேசுவதால், அவர் பெரிய தலைவராக தன்னை நினைத்துக்கொள்ள வேண்டாம். தமிழகத்தில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் எம்ஜிஆர். ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியில் உள்ளவர்கள்கூட சத்துணவு திட்டத்தால்தான் தங்களால் படித்து பதவிக்கு வரமுடிந்தது எனக் கூறியுள்ளனர். இதேபோல, தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை கொண்டுவந்தவர் எம்ஜிஆர். மதுரையில் 5-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளார். அவரை குறை சொல்வதற்கு சீமானுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே இதுவரை உள்ளது. ஆளுங்கட்சியினர் மீது ஏதாவது குறைசொல்ல வேண்டும் என்பதற்காக கிராம சபைக் கூட்டத்தை எதிர்க்கட்சியினர் நடத்தி வருகின்றனர். அம்மா கிளினிக், பொங்கல் பரிசு, குடிமராமத்து திட்டம், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்து திட்டங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால், எதிர்க்கட்சியினர் சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக்குவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in