774 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் எம்.பி ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்

774 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் எம்.பி ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்
Updated on
1 min read

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 774 பேருக்கு இலவச மிதிவண்டிகளை எம்.பி ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்.

தஞ்சாவூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலை வகித்தார்.

தஞ்சாவூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரண்மனை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் 774 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கினார்.

பின்னர், அவர் பேசியபோது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2020-21-ம் கல்வியாண்டில் 7,237 மாணவர்களுக்கு ரூ. 2.92 கோடி மதிப்பிலும், 10,955 மாணவிகளுக்கு ரூ.4.22 கோடி மதிப்பிலும் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன” என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருட்டிணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மஞ்சுளா, அண்ணாதுரை, பாலசுப்ரமணியன், ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் எம்.பி வைத்திலிங்கம் கூறியதாவது:

தமிழகத்தில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் எம்ஜிஆர்.

இதேபோல, தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை கொண்டுவந்தவர். மதுரையில் 5-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியுள்ளார். அவரை குறை சொல்வதற்கு சீமானுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே இதுவரை உள்ளது. அம்மா கிளினிக், பொங்கல் பரிசு, குடிமராமத்து திட்டம், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்து திட்டங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆனால், ஆளுங்கட்சி மீது ஏதாவது குறைசொல்ல வேண்டும் என்பதற்காக கிராம சபைக் கூட்டத்தை எதிர்க்கட்சியினர் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in