

வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தஞ்சாவூரில் டிச.29-ல் நடைபெறவுள்ள மாநில அளவிலான பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மாநகராட்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச்சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், டிச.29-ல் தஞ்சாவூரில் மாநில அளவில் 54 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணி மற்றும் திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதற்கான அனுமதியை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இதுவரை வழங்காததைக் கண்டித்து, தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தை விவசாயிகள் போராட்டக்குழு நிர்வாகிகள் நேற்று முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், நிர்வாகிகள் சாமி.நடராஜன், பி.செந்தில்குமார், பா.பாலசுந்தரம், வீரமோகன், காளியப்பன், பழனிராசன், அருணாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, பொருளாளர் வசந்தி, மாதர் சம்மேளனம் விஜயலட்சுமி ஆகியோர் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கோட்டாட்சியர் வேலுமணி, டிஎஸ்பி பாரதிராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உள்ளூர் மாவட்ட விவசாயிகளை மட்டும் வைத்து கூட்டம் நடத்தினால், அனுமதி வழங்கப்படும். வெளிமாவட்டத்தினருக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர், பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்காவிட்டால், தடையை மீறி நடத்துவோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர்.