

காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
தென்திருப்பதி என அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான கோயிலில் அதிகாலை 5.15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சன்னதியிலிருந்து திருவேங்கடமுடையான் சுவாமி எழுந்தருளினார்.
தேசிகர் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி முன்பாக அருள்பாலித்துவிட்டு பரமபத வாசலை வந்தடைந்தார். அங்கு பரமபத வாசசலுக்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டு காலை 6 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்து சுவாமி சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அதைத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கரோனா கட்டுப்பாட்டால் குறைவான பக்தர்களே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அழகம்மை, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.