கிருஷ்ணகிரியில் 29, 30-ம் தேதிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

கிருஷ்ணகிரியில்  29, 30-ம் தேதிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் வரும் 29, 30-ம் தேதிகளில் தேசிய இளைஞர் விழாவினையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை, தேசிய இளைஞர் விழாவாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. நிகழாண்டில் கரோனா தொற்று காரணமாக இவ்விழா எளிமையாக நடைபெற உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டியில் 15 வயது முதல் 29 வயது நிரம்பிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். முதல்நிலை போட்டிகள் மாவட்ட அளவில் மெய்நிகர் நடைமுறையில் (விர்ச்சுவல் மோடு) மட்டுமே நடைபெறும். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.

போட்டியாளர்கள் தங்களுடைய வீடியோ பதிவை நல்ல தெளிவான ஒளி, ஒலி அமைப்போடு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை உறுதிமொழிப் படிவத்தோடு இணைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் வரும் 29-ம் தேதி காலை 10 மணி முதல் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் போட்டியாளர்கள், மாநில போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு ஆகிய தலைப்புகளில் நடைபெறும் இப்போட்டியில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தகுதி யானவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in