

தஞ்சாவூர் மாவட்ட சிஐடியு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் பேசினார். மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், துணைச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜேசுதாஸ், தரைக்கடை சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.குருசாமி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள தீபாவளி முன்பணம் ரூ.10 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பி.எஃப், சேமநலநிதிக் கடன், விடுப்பு சரண்டர் தொகை போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன.