

தென்னமநாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஒரு வாரமாக திறக்கப்படாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று டிராக்டர்கள், மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, உளூர், சடையார்கோவில், சூரக்கோட்டை, துறையுண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், புயலால் ஏற்பட்ட மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அப்பயிர்களை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒரத்தநாடு அருகே தென்னமநாடு கிராமத்தில் செயல்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம், கடந்த ஒரு வாரமாக திறக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் காத்திருந்த விவசாயிகள், இதுகுறித்து அதிகாரிகளுடன் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் தென்னமநாட்டில் ஒரத்தநாடு–தஞ்சாவூர் சாலையில் நேற்று டிராக்டர்கள், மாட்டு வண்டிகளை நிறுத்தி மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஒரத்தநாடு போலீஸார், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் மறியலை கைவிட்டனர்.