இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம்

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் போராட்டம்:   தமிழக விவசாயிகள் சங்கம்
Updated on
1 min read

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால், தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், சி.நாராயணசாமி நாயுடுவின் 36-வது நினைவேந்தல் மற்றும் கோரிக்கை மாநாடு தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.

மாநாட்டுக்கு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் த.மணிமொழியன் வரவேற்றார்.

மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, மாநில பொதுச் செயலாளர் கே.சுந்தரம், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம், மாவட்ட துணைத் தலைவர் பா.தட்சிணாமூர்த்தி, சட்ட ஆலோசகர் ஆர்.பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியது: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களால், தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள சிறு குறு விவசாயிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை மறுக்கப்படுகிறது. எனவே, அந்த சட்டங்களை மறுபரிசீலனை செய்து, திரும்ப பெற வேண்டும். டெல்டாவில் ஏற்பட்ட புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும். இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார். ஆனால், மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமானால், தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in