

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘திருப்பூரில் ‘ஸ்மார்ட் சிட்டி' கட்டுமான பணிகள் நடைபெறுவதால், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் வெளியூர் பேருந்துகள், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, தென் மாவட்ட வழித்தடப் பேருந்துகள் கோவில்வழி தற்காலிக பேருந்துநிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
கோவில்வழியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டண விகிதங்களை அதிகரித்துள்ளனர். அங்கிருந்து மதுரை ஆரப்பாளையம் செல்ல ரூ.145 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட கூடுதல் தொலைவுள்ள திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ரூ.155 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.161-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவில்வழி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகர பேருந்துகளுக்கும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர். காங்கயம் வழியாக வரும் புறநகர பேருந்துகள், மாற்றுப்பாதையில் புதிய பேருந்து நிலையம் செல்கின்றன. பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டியவர்கள், நல்லூர் பேருந்து நிறுத்தத்துக்கு முன்பே இறக்கிவிடப்படுகின்றனர். அந்த பயணிகளுக்கு தேவையான பேருந்துகளை இயக்குவதில்லை. கூடுதல் கட்டணம் மட்டும் வசூலிக்கின்றனர். பயணிகள் தாங்கள் கொண்டுவரும் சுமைகளை சுமந்து, நல்லூர் சென்று பேருந்துகளில் ஏறி வருகின்றனர்.
பல்லடம் வழித்தட பேருந்துகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்ல நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.
திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில், பயணிகளுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் கழிப்பறை, பயணிகள் அமரும் இடம், இருக்கைகள், சுகாதாரமான குடிநீர்உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லை.
கரோனா காலத்துக்கு முன் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்ட நகர, புறநகர பேருந்துகள், தற்போது முழுமையாக இயக்கப்படாமல் உள்ளன. கிராமப்புற பேருந்து சேவையை முழுமையாக வழங்க வேண்டும். இது தொடர்பாகஅரசுப் போக்குவரத்து கழக செயலாளர் சமயமூர்த்தியை, சென்னையில் சந்தித்து மனு அளித்துள்ளோம் ’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.