Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பொதுமக்கள் ஒத்துழைக்க அறிவுறுத்தல்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 526 கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்புறங்கள் 58 அலகுகளாக பிரிக்கப்பட்டு, பொருளாதார கணக்கெடுப்பு பணி தீவிர நடந்து வருகிறது.

இக்கணக்கெடுப்பில், குடும்பத் தலைவரின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, வயது, இனம், சமூகப் பிரிவு, கைபேசி எண், செய்யும் தொழில், சுய தொழில் முதலீடுகள் மற்றும் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை, வருமானவரித் துறை பதிவு எண், சரக்கு மற்றும் சேவை வரி பதிவு எண் கொண்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த கணக்கெடுப்பில் வழங்கப்படும் விவரங்கள் முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த கணக்கெடுப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மேற்பார்வையின் கீழ், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஆகவே, கணக்கெடுப்பாளர்களிடம் தேவையான புள்ளி விவரங்களை வழங்கி நாட்டின் வளர்ச்சிக்கும், மாவட்ட வளர்ச்சிக்கும் உதவும் வகையில், திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x