

தேனி மாவட்டத்தில் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் உள்ளன என்று திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆட்சியரிடம் புகார் செய்தார்.
தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலான நிர்வாகிகள் ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் அளித்த மனுவில், போடி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: போடி தொகுதியில் வாக்காளர் பட்டியல் பாகம் எண் 1-ல் இருந்து 314 வரை 5,921 இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. பெரியகுளம் தொகுதியில் பாகம் எண் 1-ல் இருந்து 297 வரை 5,945 இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இப்பெயர்களை நீக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.